மாணவ எழுத்தாளர் பக்கம் 2


மனமே மந்திரசாவி

மது வெற்றிக்கு முதன்மையான மூலகாரணம் நம்முடைய மனம்தான். எந்தச் சூழ்நிலையிலும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நம் மனம்தான் தனியாக எதிர்கொள்ள வேண்டும். ஆதலால், நாம் அதைப் புனிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு தீய எண்ணங்களும் நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம் மனதைக் கட்டுப்படுத்தும் கருவியாக இருக்கக்கூடாது. நம் மனதிற்கு நாம் தான் தலைவர், எப்பொழுதும் நம்முடைய மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் நம்முடைய   சொல்லை நம் மனம் கேட்கும். தீய எண்ணங்கள் நம் மனதிற்கு வருவது போல தெரிந்தால் உடனே அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது, அந்த தீய எண்ணங்களை ஒரு தாளில் எழுதி கிழித்துப் போட வேண்டும்.

அதிக சிந்தனை நம்முடைய மகிழ்ச்சியை கொன்று விடும்.ஆதலால் நம்முடைய  மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. நமது வெற்றி நம் கையில். நம்முடைய மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியான நிலையில் இருக்க வேண்டும். அதுவே நம் அழகிற்கும் காரணமாகும். நம் மனதின் மூலம் நாம் தூது அனுப்பலாம். என்ன நண்பர்களே! ஆச்சரியமாக இருக்கிறதா? இதுதான் உண்மை. நாம் ஒருவரைப் பற்றி நினைக்கும் எண்ணமே அவரை நம்மிடம் கோபமாகவோ மகிழ்ச்சியாகவோ பேச வைக்கிறது. மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் மனம் நினைத்ததை முடிக்கலாம்.

எல்லாவற்றையும் நம் மனம்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. நம் மனம் ஆனது ஒரு உயிரியல் கடிகாரம். நம் மனம் புனிதமாக எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் இருந்தால், அது உண்மையாவே கடிகாரத்தின்  ஒலியெழுப்பிதான். நாம் என்ன சொல்லி வைத்தாலும் சரியான நேரத்திற்கு அதனை நமக்கு நினைவுக்குக் கொண்டு வரும். உதாரணமாக நாம் விடியற்காலையில் விரைவாக எழ வேண்டுமென்றால் ஒலி எழுப்பானை தேடாமல் உங்கள் மனதிடம் சொல்லிவிட்டு தூங்கச் செல்லுங்கள். அது அதன் வேலையை சரியாகச் செய்துவிடும். ஆனால் இவை அனைத்தும் உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் உங்கள் மனதை எவ்வாறு இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. ஆதலால் நாம் மனதை சரியான வழியில் கொண்டு சொல்ல வேண்டும். 

முதலில் மனதை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். நம் மனம் எப்பொழுதும் ஆனந்தமான நிலையில் இருக்க வேண்டும். அதாவது அனைத்துச் சூழ்நிலைகளிலும் அமைதியான நிலையில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஒரு முடிவை எடுக்க முடியும். அந்த முடிவு சரியானதாகவும் இருக்கும். நம் வாழ்வில் நமக்குப் பல பிரச்சனைகள் வரலாம். அனைத்தையும் கண்டு  நாம் துவண்டு விடக்கூடாது. பிரச்சனைகளை நாம் பிரச்சனை என்று நினைத்தால்தான் பிரச்சனை. பிரச்சனைகள் “மூன்று” வகைப்படும். அதுவும் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்தது.(i)இதெல்லாம் ஒரு பிரச்சனையா(ii) அனைவருமே பிரச்சனையை  சந்திக்கிறார்கள் தானே (iii)எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்  என இந்த மூன்றையும் நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்கள் எனில் வாழ்க்கையில் வரும் பிரச்சனையைக் கண்டு துவண்டுவிட மாட்டீர்கள். நம் வாழ்வில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் ஏதோ ஒரு நல்லதிற்காகவே நமக்கு கடவுள் கொடுக்கிறார் என நினைத்து அதனை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

‘‘நம் வாழ்வில் நமக்கு தேவையான முக்கியமான ஒன்று தைரியம்.”

நாம் இப்பொழுது மனதை தூய்மையான வழியில் எவ்வாறு கொண்டு செல்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். நாம் தினமும் இரவில் தூங்கச் செல்லும்போது நம்முடைய எதிர்கால வாழ்க்கையைப்பற்றி தினமும் யோசிக்க வேண்டும். தினமும் நாம் மற்றவர்களுடன் நேரத்தை ஒதுக்குகிறோமோ, இல்லையோ நாம் நம்முடன் சிறிது நேரம் அதிகபட்சமாக 20 நிமிடமாவது ஒதுக்க வேண்டும். அதுவே நம்முடைய வெற்றிக்காக நாம் போடும் முதலீடாகும். நாம் முதலில் நம்முடைய இலக்கை தீர்மானிக்க வேண்டும். பின்பு எவ்வழியில் கொண்டு செல்லவேண்டும் என்பதை ஆராயவேண்டும். நீங்கள் உங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ  அவை அனைத்தையும் மனக்கண்ணுக்குள் கொண்டுவந்து ஒரு மனச்சித்திரமாக ஓட வைக்க வேண்டும். இதனை நீங்கள்  தினமும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் ‘‘உங்கள்  வாழ்க்கை உங்கள் கையில்’’ என்பது நிரூபணமாகும்.

எப்பொழுதும் உங்கள்  மனம் நேர்மறை எண்ணங்களால் நிறைந்து வழிய வேண்டும். உங்கள் மனம் அனைத்து நேரங்களிலும் அமைதியான நிலையில் இருக்காது. அது மாதிரியான நேரங்களில் உங்களுக்கு பிடித்த கடவுளின் ஸ்லோகத்தை உங்களால் முடிந்த அளவு ஒரு தாளில் எழுத வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள்  மனம் ஒரு நிலைக்கு வந்துவிடும். உங்களுடைய  ஆசைகள் அனைத்தையும் அடிக்கடி நீங்கள்  நினைக்க வேண்டும். அதாவது, காலையில் எழும்போதும் இடையில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இரவில் தூங்கச்செல்லும் போதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கூடிய விரைவில் நீங்கள்  நினைத்த இலக்கை அடைய முடியும். பிறகு  உங்கள்  இஷ்ட தெய்வத்தை நீங்கள்  தினமும் வணங்க வேண்டும். நாம் இந்த மனதிற்கான சூத்திரத்தை பயன்படுத்தினால் நம் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.