வெற்றித் திசை


முத்து ஆதவன் வை.காளிமுத்து

பேருந்தில் ஏறி அமர்ந்தேன், அது இருவர் அமரும் இருக்கை. ஏற்கனவே ஒருவர் அருகே அமர்ந்திருந்தார். நான் அவருக்கு அருகே அமர வேண்டும். அவர் என்னுடைய இருக்கையில் பாதியை ஆக்கிரமித்து இருந்தார்.

நடுத்தர வயதுக்காரர் அப்படி ஒன்றும் பருமனாகவும் இல்லை.  நான் அவர் அருகில் அமரச் சென்றேன். ஆனால், அவரோ என் இருக்கையின் பாதியை ஆக்கிரமித்திருந்தார். சற்று நகர்ந்து அமர்ந்து  எனக்கு இருக்கை தர எண்ணவில்லை.

நானும் அவரை சற்று தள்ளி அமர கோரவில்லை. மீதமிருந்த பாதி இருக்கையில் சற்று அடக்கமாக நான் அமர்ந்துகொண்டேன்.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரப்பயணம் அது. அவரும் இறுதிவரை வர இருப்பவர். எப்போதாவது பேருந்து குலுங்கும் போது அல்லது சிறிது நேரம் கழித்து அவர் சற்று அயரும் போது நாம் நம்முடைய இருக்கையை முழுமையாக பிடித்து சவுகரியமாக உட்கார்ந்து கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

 அவ்வப்போது நான் சற்று என் உடல் அசைவின் மூலம் எனக்கான இடத்தை விரிவுபடுத்த முனைந்த போதெல்லாம் அவரும் சற்று இறுக்கமாக அமர்ந்து சாமர்த்தியமாக என் முயற்சியை முறியடித்தார்.

இப்போது நான் என்ன செய்யவேண்டும்? எனக்குள்ள உரிமைக்காக அவரிடம் போராட வேண்டும், அல்லது ‘‘ஐயா சற்று தள்ளி அமருங்கள்’’  என்று கூறவேண்டும், அப்படி இடம் விடும் பெருந்தன்மை உடையவராகவும் தோன்றவில்லை .

அப்படி பெருந்தன்மை உடையவராக இருந்திருந்தால் முன்னரே உணர்ந்து இடம் கொடுத்திருப்பார். இப்பொழுது நான் அவரிடம் வம்பு கட்ட வேண்டியவனாக இருக்கிறேன். ஆனாலும் ஏற்கனவே பேருந்து பயணத்தில் பல அனுபவங்கள் இருக்கின்றனவே.

‘‘இவ்வளவு இடம் இருக்கிறதே சற்றுத்தள்ளி நிற்கலாமே!’’ என்று ஒருவர் சொல்ல, ‘‘இது ஒன்றும் உன் அப்பன் வீட்டு பஸ் அல்ல உன் சவுரியத்திற்குப் பயணம் செய்ய. வேண்டும்  என்றால் தனியாக ஒரு கார் பிடுச்சுகிட்டு வர வேண்டியதுதானே’’ என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் எக்காளமிடும் சவுண்டு பார்ட்டிகள் பலரை நாம் கண்டிருக்கின்றோம் அல்லவா?

மறுக்கும் மன அமைப்பு

 அப்படிப்பட்ட ஒரு நபராக இவர் இருந்தால் என்ன செய்வது என்ற பயம் வேறு என்னைத் தடுத்தது. பொதுவாக இந்நிகழ்வு மனம் சார்ந்த விஷயம். அந்த நபருக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அவருடைய மன அமைப்பானது அதிலிருந்து விடுபட விடாமல் அவரைத் தடுக்கிறது.

அடுத்தவருடைய இடத்தையும் நாம் பிடித்திருக்கிறோம் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் என்ன நினைக்கிறார் என்றால், நான் ஐம்பது ரூபாய் கொடுத்து பயணச் சீட்டு வாங்கி இருக்கிறேன், அதை முழுமையாக மட்டுமல்ல இன்னும் கூடுதலாக நான் அனுபவிக்க வேண்டும், எந்த சிரமமும் இல்லாமல் மிக சவுகரியமாக நான் பயணம் செய்ய வேண்டும், மற்றவர்களைப் பற்றி எனக்கு எந்த கவலையும் தேவையில்லை என்பது மட்டுமே அவருடைய மன அமைப்பாக இருக்கிறது.

இப்போது நான் செய்ய வேண்டியது ஒன்று ‘‘ஐயா சற்று  தள்ளி உட்காருங்க, நானும் பணம் கொடுத்துதான் டிக்கெட் வாங்கி இருக்கிறேன். நான் ஒன்றும் இலவசமாக பயணம் செய்யவில்லை’’ என்று கூற வேண்டும்.

அவர் அடாவடியாக பேசினால் நானும் பதிலுக்கு அவரைப் பின்பற்றி பேருந்துக்கு உள்ளேயே பஞ்சாயத்து கூட்டவேண்டும். மற்றொன்று, இப்படி அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இப்படி சண்டித்தனம்  செய்கின்றார். இப்படிப்பட்டவர்கள் உருப்படுவார்களா? என்று மனதளவில் சபித்துவிட்டு  என்னுடைய பயணத்தைத் தொடர வேண்டும்.

எதைத் தேர்ந்தெடுப்பது?

இதில் நான் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது?என்று வினா எழுந்தபோது இந்த இரண்டையுமே தவிர்த்து விடு, இவ்விரண்டு வழியுமே அறியாமையின், அறிவின்மையின்  பார் பட்டுவிடும் என்று உணர்ந்து மூன்றாவதான  ஒரு வழியை எடுத்துக்  கொடுத்தது என் ஆழ்மனம்.

ஆம்! இதுவும் ஒரு அனுபவமே! இதை ரசிக்கலாமே! என்று தோன்றியது. இப்போது என் மன அமைப்பு முற்றிலுமாக மாறி ஒரு புதிய புரிதலில் இப்போது அவரின் செயல்கள் எனக்கு எந்த வெறுப்பையும் ஏற்படுத்தவில்லை மாறாக நகைப்பைத் தந்தது.

உரைக்கற்கள்

ஒரு அறிஞரிடம் சென்று ஒருவர் ‘‘எங்கள் இருவரில் அறிவாளி யார் என்று கூற முடியுமா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர் ‘‘உங்களில் யாரால் விட்டுத்தர முடியுமோ அவரே அறிவாளி’’ என்றார்.

ஆக விட்டுக்கொடுத்தல், பிறர் செய்யும் தீமைகளைச் சகித்துக் கொள்ளுதல், அவர்களின் நிலையிலேயே அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பன போன்ற குணங்களை உருவாக்கிக்கொள்வது என்பது மிகவும் உயர்ந்த ஒரு உன்னதமான நிலையாகும். உண்மையில் அவர்கள்  நமக்கான உரைக் கற்கள்.

அவர்களைக் கொண்டு நம்மை நாமே உரைத்துப் பார்த்துக்கொள்ளலாம். அவர்களைப் போன்ற குறுகிய உள்ளத்தை நாம் பெறவில்லை என்று மகிழ்ந்து கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளுதல், முரண்படாதிருத்தல், சூழ்நிலைகளோடு ஒத்துப்போதல், பிறர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் போன்ற குணங்கள் உண்மையில் தெய்வீக குணங்கள் ஆகும். அத்தகைய குணங்கள் நமக்கு அமைந்திருப்பது ஒரு வரம் தானே! இறைவன் மீது எத்தகைய நல்லெண்ணம் கொண்டு இருந்தால் இத்தகைய உயர்ந்த குணங்களை எனக்கு வழங்கி இருப்பார் என்று எண்ணி மகிழ்ச்சி அடையலாம்.

இன்று நம்மிடம் இருப்பதைக்கொண்டு,  இன்று எனக்கு இதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது, இதை இப்படியே ஏற்றுக் கொள்வேன் என்னும் ஏற்புத் திறனை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும், நம்மிடமுள்ள இயல்புத்தன்மையை நாமே சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இந்நிகழ்வுகளை அனுபவிக்கப் பழகிக் கொண்டால் மனம் மிகவும் விரிவடையும். இவ்விரிவில் பரந்த உள்ளம் அமையப்பெறும். அப்படிப்பட்ட மன அமைப்பை உருவாக்கிக் கொண்டால் எந்த சூழ்நிலையையும் இன்பமயமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றி இன்பம் காணலாம் அல்லவா? 