வழிகாட்டும் ஆளுமை – 10


திரு. நந்தகுமார் IRS

சில நாட்களுக்கு முன்பு என் நண்பர், வாட்ஸ் ஆப் மூலம் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். “தாய்மொழி என்றால் என்ன?” என்று கேட்டுவிட்டு, அதற்கு பதிலாக “அம்மா பேசுகிற மொழி தான், நமது தாய்மொழி” என்றார். அதற்கு “ஒரு வேளை அம்மாவுக்கு பல மொழிகள் தெரிந்து, உன்னிடம் ஒரு மொழியிலும், மற்றவர்களிடம் வேறு மொழிகளிலும் பேசும் போது, அப்போது நமது தாய்மொழி எது?” என்று நான் கேட்டேன். சற்று யோசித்தார் அவர். நான் மீண்டும் அவரிடம் “தாய்மொழி என்றால், நீங்கள் தாயின் கருவில் இருக்கும் போது, அம்மா என்னென்ன கேட்பார்களோ, பார்த்தார்களோ, உணர்ந்தார்களோ எல்லாவற்றையும் கருவில் இருக்கும் நீங்களும் உணர்வீர்கள்!” என்று கூறினேன். மேலும் ‘ஆராரோ ஆரீராரோ’ என்று நம்முடைய பெற்றோர்கள் தாலாட்டுப் பாடலைப் பாடுவார்கள். தந்தையும், தாயும் நமக்கு ஒரு ஆளுமை பிறக்கப் போகின்றது. ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும், ஏதோ ஒரு பெரிய ஆளுமையை நம் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்று பூரிப்படைவார்கள்.

தாயின் கருவறையை விட்டு நாம் வெளியே வந்தவுடன், அப்போது தான் நம்மால் இதை உணர முடியும். நம் அம்மா என்ன உணர்ந்தார்களோ அதையே நாமும் உணர்வோம். அதுதான் நம் தாய்மொழி. மொழி, வார்த்தைகளை கடந்து முதலில் நம் தாய் உணர்ந்ததை நாம் உணர்ந்தோம் அல்லவா அது தான் நமது தாய்மொழி. நாம் வெளியில் வரும் போது நமக்கான அனைத்து உணர்வுகளையும் உணர வேண்டும். ஐந்து உணர்வுகளில் பலர் ஒன்றை மட்டுமே தேடித் தேடிச் செல்கிறார்கள். ஒரு சிறந்த தலைவனானவன் அனைத்து உணர்வுகளையும் உணர்ந்து, தேடிச் சென்று பயணிப்பவனே ஆவான்.

பாரதியார் அழகாகக் கூறுவார் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே” என்று. ஒவ்வொருவரையும் செல்வக் களஞ்சியம் என்று எவ்வளவு அழகாகக் கூறுகிறார். அவ்வாறு தான் நம்முடைய பெற்றோர்கள் நம்மை செல்வக் களஞ்சியங்களாக எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். அதேபோல “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்” என்ற கல்யாண சுந்தரத்தின் வரிகள் போல, நாம் அனைவருக்கும் ஒரு சிறந்த தலைவனாகக் கூடிய தகுதியும், வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், தலைவனாகக் கூடிய தகுதிகள் என்னென்ன? என்று ஆராயும் போது, தத்துவார்த்தமாகக் கூறிவிட முடியும். ஆனால், மாற்றத்தை நீங்கள் உங்களுக்குள் உணர வேண்டும். அப்படி மாற்றத்தை உணர்ந்து நீங்கள் மாபெரும் தலைவனானால் உங்களைப் பார்த்து மற்றவர்கள் மாறுவார்கள்.

இதனை வாசிக்கக் கூடிய அனைவருக்கும், நல்ல அம்மா-அப்பா, நல்ல பள்ளி, நல்ல கல்லூரி, நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை என்று இல்லையென்றாலும் அவரவருக்குள் ஒரு நல்ல தலைவர் ஒளிந்திருக்கிறார். காமராசர் ‘படிக்காத மேதை’ என்று நாம் அனைவரும் தவறாகச் சொல்கிறோம். மேதை ஆவதற்கு படிப்பு மட்டும் தேவையில்லை. அறிவை உணர்ந்தாலே போதுமானது. சிலர் படித்தும் முட்டாளாக இருக்கிறார்கள். சிலர் படிப்பறிவு இல்லாத போதிலும் மேதைகளாக நிலைத்து  நிற்கிறார்கள்.

நாம் மாறுகிறோம் என்பது மட்டுமல்ல, நம்மால் மற்றவர்களையும் மாற்ற முடியும் என்பதே சிறந்த தலைமையாகும். நிச்சயமாகத் தோல்விகள் நம்மைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், துவண்டு விடாமல் இலக்கை எட்ட வேண்டும். பெரிய, பெரிய தலைவர்கள் எல்லோருமே ஒரு மூட்டை நிறையத் தோல்விகளை ருசித்தவர்களே. நாள்தோறும் நாம் எத்தனை நபர்களைத் தினமும் சந்தித்து வருகிறோம். ஆனால், எத்தனை நபர்களை நாம் உள்வாங்குகிறோம், உள்வாங்குவதற்கான அவசியம் இல்லாமல் இருக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படிப் பல மனிதர்களை நாம் அன்றாடம் சந்திக்கும் போது, அவர்களிடம் பலவற்றை உள்வாங்கிப் பின்பற்றுவதும் ஒரு சிறந்த தலைவனின் பண்பு தான்.

நான் லாட்டரி டிக்கெட் விற்கும் போது, ஒரு நாளைக்கு 1,000 நபர்களைத் தினமும் சந்திப்பேன். வெறும் 300 லாட்டரி டிக்கெட் விற்பதற்கு கிட்டதட்ட 1:3 அளவில் நான் மனிதர்களைச் சந்திப்பேன். ஆனால், மற்ற அந்த 700 நபர்களுடனும் அந்த தொடர்பு, உரையாடல்கள் சிறந்த அனுபவம் ஆனது. நான் 1,000 நபர்களை சந்தித்ததால் தான் 300 டிக்கெட் விற்க முடிந்தது. எனவே, உங்களின் இலக்கைப் பெரிய அளவாக வைத்துக்கொள்ளுங்கள். எதுவும் எளிதல்ல, எல்லாம் சாத்தியமே. உங்களுக்கான தனி மதீப்பீட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனைச் செயல்படுத்திக் காட்டுங்கள். ஐந்து உணர்வுகளையும், முழுமையாக உள்வாங்கி, தேட ஆரம்பியுங்கள். உங்களுக்குள் இருக்கும் தலைவனை அடையாளம் காணுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்த இளையராஜா பாடல்களில் இருந்த ஒரு பாடலின் வரிகளை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம், நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
அமைத்தேன் நான்…

என்னே! அருமையான வரிகள். இந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப தோற்றாலும் விடக் கூடாது, தொடர்ந்து ஓடிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அறிவு வேறு ஆளுமை வேறு அல்ல, அறிவைப் பயன்படுத்துகிற போது உங்களின் ஆளுமை வெளிவருகிறது. எனவே மாற்றமே உன்னைத் தலைவனாக மாற்றும். வருங்காலத் தலைவர்களுக்கு, ஆளுமைகளுக்கு வாழ்த்துகள்.