கல்வி-அறிவு-ஞானம்

டாக்டர்.ஜாண் பி.நாயகம் எம்.டி

இந்தத் தொடரின் தலைப்பு கல்வி – அறிவு – ஞானம். ஏன் இதைத் தலைப்பாகத் தந்திருக்கிறேன்?  நாம் கற்கும் கல்வி நிச்சயமாக அறிவைத் தரும். இந்த அறிவை ஆங்கிலத்தில் –knowledge – என்கிறோம்.

“Knowledge is power” என்று ஒரு பழமொழி உண்டு. ஆம், அறிவு ஒரு பலம்தான். கல்வியினால் வரும் அறிவு படிப்பறிவு எனப்படும். ஆனால் இது முழுமையான அறிவு அல்ல. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற ஒரு பழமொழியே உள்ளது!

படிப்பறிவோடு, பட்டறிவு எனப்படும் அனுபவ அறிவும் சேரும் போதுதான் அறிவு முழுமையடைகிறது. வாழ்க்கைக்கு உதவுகிறது.

கல்வியால், அனுபவத்தால் பெற்றுக்கொண்ட அறிவை தேவைப் படும்போது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தால் அதுவே புத்திசாலித்தனம் –Intelligence – எனப்படுகிறது.

கல்வியின் நோக்கம் முதலில் அறிவை வளர்ப்பது. அந்த அறிவு வளர்ந்து,  புத்திசாலித்தனத்தையும் உருவாக்கினால் மட்டுமே அது முழுமையான கல்வியாகும். அறிவோடு புத்தியும் இணைந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். 

அறிவு, புத்திசாலித்தனம் ஆகிய இரண்டும் தேவைதான் ஆனால் இவை ஒரு வெற்றிகரமான மனிதனை உருவாக்குமே தவிர ஒரு நல்ல, பண்புள்ள மனிதனை உருவாக்குவது இல்லை.

இவை உருவாக, ஞானம் அவசியம். ஞானம் (Wisdom) என்பது அறிவு,  புத்திசாலித்தனம் ஆகிய இரண்டையும் விட மிக உயர்ந்தது.

புத்திசாலிகளான – பண்பும், ஞானமும் நிறைந்த ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்கினால் நாளைய பாரதம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கும்.

தந்திர யோக முத்திரைகள் மூலமாக குழந்தைகள் மனதில் படிப்பின் மீது ஆர்வத்தை உருவாக்க முடியும். அறிவு தாகத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த முடியும். அதற்கான ஒரு எளிய வழிமுறையே பூரண ஞான முத்திரை.

அறிவு, புத்திசாலித்தனம் ஆகிய இரண்டையும் விடமேலானது ஞானம். அந்த ஞானத்தின் உயர்நிலையையே பூரண ஞானம்-முழுமையான ஞானம் என்கிறோம். அத்தகைய பூரண ஞானத்தையும், அறிவு தாகத்தையும் தேடலையும் உருவாக்கும் ஒரு அற்புதமான முத்திரையே பூரண ஞான முத்திரையாகும்.

ஏற்கெனவே ஞான முத்திரை குறித்து விரிவாகக் கண்டோம். ஆரம்ப நிலைகளில் ஞான முத்திரையைச் செய்தாலே போதும். ஆறு வயது முதலே ஞான முத்திரையைச் செய்யத் துவங்கிவிடலாம். 12 வயதிற்குமேல்தான் பூரண ஞான முத்திரையைத் துவங்க வேண்டும்.

செய்முறை

ஆள்காட்டி விரலைமடித்து, பெருவிரலின் நுனிப்பகுதிக்கு சற்றுகீழாகத் தொடவும்.

அதிக அழுத்தம் வேண்டாம். சற்றேதொட்டுக் கொண்டிருந்தால் போதும்.

பிற மூன்று விரல்களும் தளர்வாக சற்றே வளைந்தபடி இருக்கட்டும்.

இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும்.

இந்த முத்திரையே ஞானமுத்திரை எனப்படும்.

பூரண ஞான முத்திரை

ஞான முத்திரையை இரு கைகளிலும் செய்து, தொடைகளின் மேல் கைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

இடது கை தொடையின் மீதே இருக்கட்டும்.

ஞான முத்திரையைச் செய்தபடியே வலது கையை மட்டும் மேலே கொண்டு வந்து, மார்புக்கு நேராக (அனாஹதச்சக்கரம் எனப்படும் இதயச்சக்கரத்திற்கு அருகில்) வைத்துக்கொள்ளவும்.

இதுவே பூரண ஞான முத்திரையாகும்.

எவ்வளவு நேரம்?

குறைந்த பட்சம் 8 முதல் 15 நிமிடங்கள்  செய்யவும்.

காலை இரவு ஆகிய இரு வேளைகளிலும் செய்யலாம்.

காலையில் படிக்கத் துவங்கும் முன்னர் இந்த முத்திரையைச் செய்துவிடவும்.

இரவில் தூங்கச் செல்லும் முன்னர் செய்வது நல்லது.

பலன்கள்

படிப்பின் மீது ஆர்வமும் காதலும் உருவாகும். அறிவு தாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

மனம் அமைதியடையும். மனம் ஒரு முகப்படுவது எளிதாகும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

மனதில் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

மனதிலும் எண்ணங்களிலும் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

மனமும் சிந்தனைகளும் பண்படும்.

கோபம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகள் அழிந்துபோகும்.

பூரண ஞானமுத்திரையைச் செய்யும் போது மனதில் ‘அன்பு’ ஊற்றெடுக்கும்.

மனம் மகிழ்ச்சியால் நிறையும். எப்போதும் ஒரு சந்தோஷமான மனநிலை உருவாகும்.

மனச் சோர்வு, மன இறுக்கம் போன்ற உளவியல் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

மூளை சுறுசுறுப்பாகும். மூளையின் செயல் திறன் பலமடங்கு அதிகரிக்கும். மூளைச் சோர்வு ஏற்படாது.

எப்படி வேலை செய்கிறது?

இந்த முத்திரையைச் செய்யும்போது, பெருவிரலில் உள்ள ‘தியான நாடி’ என்ற நாடி தூண்டப்படுகிறது. இதனால் மூளை அமைதியடைகிறது. வீணான குழப்பங்கள், மனசஞ்சலங்கள் ஆகியவை மறைந்து மனதில் ஒரு தியான நிலை உருவாகிறது. இத்தகைய மனநிலையில் படிப்பது, கற்றுக்கொள்வது, சிந்திப்பது போன்ற அனைத்துச் செயல்களும் எளிதாகிறது.

பெருவிரலில் தான் மூளையைத் தூண்டும் வர்மப்புள்ளிகளும், ரிப்ளெக்ஸதாலஜி பகுதிகளும் உள்ளன. இந்தப் புள்ளிகளும், பகுதிகளும் தூண்டப்படுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

இந்த இரு முத்திரைகளைச் செய்யும்போதும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எனவே பிராணவாயு (ஆக்சிஜன்) அதிக அளவில் மூளைக்குக் கிடைக்கிறது. இது மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. மூளையின் செயல் திறனை பலமடங்கு அதிகரிக்கச் செய்கிறது.

பூரண ஞானமுத்திரையில் வலது கையை மார்புக்கு அருகில் வைத்துச் செய்வதால், அனாஹதச் சக்கரம் தூண்டப்படுகிறது. அன்பு, பாசம், காதல் ஆகிய அனைத்து நல்லபண்புகளையும் உணர்வுகளையும் ஆளும் சக்கரம் அனாஹதம்.

இது தூண்டப்படுவதால் மனதில் அன்புபெருகும். ஆனந்தமான மனநிலை உருவாகும். இந்த அமைதியான, ஆனந்தமான மனநிலையில் அமர்ந்து படிக்கும்போது கற்பது என்பது ஒரு சுகமான அனுபவமாக மாறும்!