வழிகாட்டும் ஆளுமை

திரு. நந்தகுமார் IRS

‘‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே!” என்ற பாரதியாரின் பாடலைக் கேட்கும் போது ரொம்ப அருமையா இருக்கு பாத்தீங்களா. பாரதியார்  எல்லோரையும் செல்வக் களஞ்சியமே என்று சொல்கிறார். உலகில் நாம் பிறக்கும் பொழுதே அனைவரும் பலவிதமான ஆற்றலோடு தான் பிறக்கிறோம் என்று சொல்கிறார். ஆக, இந்தப் பாரதியாரின் கூற்றிற்கு, நம் எத்தனை பேருக்கு அர்த்தம் புரிகிறது என்று தெரியவில்லை. நம் அனைவருக்கும் தாகம் எடுக்கிறது, தாகம் எடுத்தவுடன் நாம் தண்ணீர் குடிக்கிறோம். ஏன் ? பல வேலைகளைச் செய்யும் பொழுது கூட, நாம் களைப்போடு, தாகத்தோடு இருப்போம். எனவே, தண்ணீர் அருந்தி புத்துணர்ச்சி பெற்று மீண்டும் பணிகளை தொடர்வோம். அதுபோல, உலகில் பிறந்த நம் அனைவருக்கும் ஒரு “ஆளுமைத் தாகம்” என்ற ஒன்று கட்டாயமாக இருக்கிறது. ஆனால், அதை நாம் யாரும் வெளிக்கொணர்ந்து மீண்டும் அதனை புதுப்பித்துக் கொள்வதில்லை. இவ்வாறு நாம், தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து தாகத்தை தணித்துக் கொள்வதுபோல ஆளுமைத் தாகம் எடுக்கும் போதெல்லாம் நம்முடைய ஆளுமைகளை வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.

நாம் வளர வளர நம்முடைய ஆளுமைத் தாகமும் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். சில சமயம், நம்மில் சில மனிதர்கள், தாகம் எடுக்கும்போது, முறையாக தண்ணீரை அருந்தாமல் இருந்தால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அதன் நீட்சியாக கிட்னி டயாலிசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகிறோம். அதுபோல, நம்முடைய ஆளுமைத் தாகத்திற்கு தேவையான நம்முடைய ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்று சொன்னால், நம்முடைய ஆளுமையிலும் ஒரு டயாலிசிஸ் செய்ய நேரிடும். இன்றைய  இளைஞர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களின் மூலம் எந்த அளவிற்கு தங்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்கிறார்கள், இதனை முறையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

 மேலே கூறிய பாரதியாரின், பாடல் வரிகளுக்கு இணங்க அவர் நம் அனைவரையும் செல்வக் களஞ்சியமே என்று கூறுகிறார். அதாவது, நமக்குள்ளேயே ஒரு ஆளுமைப் புதையல் இருக்கிறது என்று கோடிட்டுக் காட்டுகிறார். ஆக, இந்த ஆளுமைப் புதையலை நாம் ஒரு சுருக்குப் பையில் போட்டு அடைத்து வைத்திருக்க முடியுமா? என்றால் அது சரியல்ல. பரந்து விரிந்த இந்த  உலகத்தில்,  நம்முடைய ஆளுமையை வளர்த்து ஆளுமை நட்சத்திரமாக ஜொலித்து பீடுநடை போட வேண்டும். நமக்குள்ளே புதைந்திருக்கும், இந்த ஆளுமைப் புதையலை  முதலில் நாம் தேடவேண்டும். அதை, நாம் தேடி அடையாளம் கண்டுகொண்டு நம்முடைய ஆளுமையைப் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் உங்களுக்கு, எந்தெந்த விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவை எல்லாவற்றையும் நீங்கள் பருக வேண்டும். இது நிச்சயமாக, உங்களின் ஆளுமைத் தாகத்தை தீர்க்கும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் இந்த ஆளுமைத் தாகத்தை எடுக்க விடுவதுமில்லை, அந்த ஆளுமைத் தாகத்தை தீர்ப்பதும் இல்லை. இதுதான், நம்மில் பலருக்குப் பிரச்சனையாக அமைந்துவிடுகிறது. இதுவே நம்முடைய ஆசைகளை, நம்முடைய இலக்குகளை நாம் தொடர்ந்து செயல்பட்டு அடைய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. வாழ்க்கையில் நாம் எல்லா விஷயங்களையும் பெற அல்லது கற்றுக்கொள்ள ஆசைப்படலாம், இதுதான் ஆளுமைத் தாகமும் கூட.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மிகப்பெரிய பார் போற்றும் இசைக் கலைஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் ஒரு இசைக் கலைஞனாக ஆக வேண்டும். பிறகு அந்தத் துறையில் நீங்கள் எண்ணியவாறு உங்களுடைய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொண்டால் அது உங்களை வழிநடத்திச் செல்லும். நம்முடைய ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரகுமானை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் முதன்முதலில் இசைக்கருவிகளை தொடும் பொழுதோ அல்லது வாசிக்கக் கற்றுக் கொண்ட பொழுதோ அவர் ஆஸ்கார் விருதினை வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார். ஆனால், அவரிடம் இருந்த அந்த ஆளுமைத் தாகம் தான், மெல்ல மெல்ல அவரை ஆஸ்கார் விருது வாங்கும் வரை அழைத்துச் சென்று இருக்கிறது. இன்னும் பலவற்றிற்கும் அழைத்துச் செல்ல இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். அப்போது 24 பக்கங்களுக்கு என்னால் 17 பக்கங்களுக்கு மேல் எழுத இயலவில்லை. அப்போது தான் எனக்கும் தோன்றியது, படிப்பது மட்டுமல்ல, அதைத்தாண்டி உலகத்தை நான் எவ்வாறு அறிந்து வைத்திருக்கிறேன், பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. என்னுடைய ஆளுமைத் தாகத்தையும் நான் வளர்த்துக் கொண்டேன்.  இவ்வாறு, நாம் செய்கின்ற போது தான் நம்முடைய ஆளுமைத் தாகம் உள்ளபடியே அர்த்தமுள்ளதாகிறது. வெறுமனே, வெறும் படிப்பு மட்டுமே இதற்குத் தீர்வாகாது. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். பல தகவல்களை நாம் சேகரிக்க வேண்டும். நம்முடைய ஆளுமைத் தாகத்தை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் நமக்கு, மிகப்பெரிய வாழ்க்கையை அடையத் தீர்வாக அமையும்.  கடவுள் நம்மைப் படைக்கும்போதே நமக்குள்ளே ஒரு புதையலை அதாவது ‘ஆளுமைப் புதையலை’ புகுத்தி விட்டார். அதனை, நாம் எவ்வாறு கண்டுணர்ந்து வளர்த்துக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர், ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களும் ஒருமுறை கூறுகையில் “இராமநாதபுரத்தில் இருந்து நான் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு வந்து படிக்க வேண்டும் என நினைத்த பொழுது, எனக்கு அந்தப் படிப்பு தான் நினைவில் இருந்ததே தவிர, அந்த தூரம் என் கண்களுக்கு எட்டவில்லை. மேலும், நான் எம்.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கும் பொழுதும் எனக்கு இருந்த ஆளுமைத் தாகம் தான், என்னை இத்தனை இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தது. மேலும், நான் விஞ்ஞானியாக உயர்ந்து குடியரசுத் தலைவர் என்ற பதவியை அடையும் வரையில் எனக்குள் இருந்த அந்த ஆளுமைத் தாகம் தான் காரணம்” என்று சொன்னார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்த அந்த ஆளுமைத் தாகம், ஒரு சிறிய வாட்டர் பாட்டிலில் அடைத்து வைத்திருந்தது போல அல்ல மாறாக அது மிகப் பெரிய கடலாக இருந்தது.

அது போலத் தான், நமக்கும் நம்முடைய ஆளுமைத் தாகம் ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து வைத்து விட்ட ஒன்றாக இருக்கக்கூடாது. அது மிகப் பெரிய கடலாக இருக்க வேண்டும். எனவே, உங்களின் ஆளுமைத் தாகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தண்ணீரை நீங்கள் அருந்துங்கள். அது உங்களை, நிச்சயமாக உங்கள் ஆளுமையை வளர்த்து நீங்கள் நினைத்த இலக்கை நோக்கி அடைய, உங்களை அது வழிநடத்தும். இதை வாசித்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவருமே பாரதியார் கூறியவாறு ‘செல்வக் களஞ்சியம் தான்’, ‘ஆளுமைக் களஞ்சியம் தான்’ என்பது உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும். எனவே உங்களின் தாகத்தை, உங்களின் ஆளுமைத் தாகத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களி(ல்)ன் தேடலைத் தொடங்குங்கள். அது உங்களை, சிகரம் தொட வைக்கும். வாழ்த்துகள்!