வழிகாட்டும் ஆளுமை – 2

 

-திரு. நந்தகுமார் IRS

ஒருமுறை கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள ஒரு காட்டிற்கு சென்றிருந்தோம். அங்கிருந்த வனக்காப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது. குறிப்பாக அங்கிருந்த தேனீக்களைப் பற்றி சுவாரஸ்யமாக சில கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. நான் அவரிடம் “இந்த தேனீக்கள் தேன் எடுப்பதற்கு எவ்வளவு தூரம் போகும் ?” என்று கேட்டேன். அதற்கு அவர் “சார், உங்களுக்கு தெரியாது, இந்த தேனீக்கள் எல்லாம் எப்படியோ ஒரு நாற்பது மைல்களாவது சென்று அங்கு தேன் எடுத்து வரும். அதே சமயம் மீண்டும் தேன் எடுக்க அதே இடத்திற்குச் செல்லாது” என்று கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்டவுடன் நான் சற்று சிந்தித்தேன். மனிதர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா? இது எங்கிருந்து வருகிறது? என்று ஆராய்ந்தேன். ஏன் எனக்கு தோன்றியது என்றால், நான் ஆறாம் வகுப்பில் தோல்வியுற்றபோது தொடர்ந்து தோல்விகளை மட்டுமே ருசித்து வந்தேன். நான் ஏன் தோல்வி அடைகிறேன்? என்று எனக்கும் தெரியாது. மற்றவர்களும் அதற்கான சரியான காரணத்தைச் சொல்ல இயலவில்லை? பள்ளியில், கல்லூரியில் என்று போகும் இடமெல்லாம், செல்லும் இடமெல்லாம் தோல்வி முகம் மட்டுமே தான் எனக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. அப்போது தான் நான் இந்த தேனீக்களைப் பற்றி சிந்தித்தேன். அந்த தேனீக்களுக்கு 30 மைல்கள், 40 மைல்கள் சென்று போய் தேன் எடுக்க வேண்டும் என்று யாரும் சொல்லித் தரவில்லை, தனது பெற்றோர்கள் வழிகாட்டவில்லை நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் அந்த தேனீக்களை வழிநடத்தவில்லை. திடீரென்றும் அந்த தேனீக்கள் அவ்வளவு தூரம் சென்று தேன் எடுக்காது. மாறாக, அந்த தேனீக்களுக்கு மரபியல் ரீதியாகவே, இயற்கையாகவே அந்த தேனீக்களின் முன்னோர்கள் இந்த ஆற்றலை அதனுடைய அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் சென்றிருக்கின்றன. ஏன்? நம் வீடுகளில் ‘நீ அப்படியே உன் அப்பாவைப் போல இருக்கிறாய்!’ ‘உன் அம்மாவின் குணம் உன்னிடம் அப்படியே உள்ளது’ என்று நம்முடைய நடை, உடை,  பாவனையை வைத்துச் சுட்டிக்காட்டுவார்கள். நல்லவைகளாக இருந்தால் நாம்
சந்தோஷப்படுவோம், கெட்டவகைளாக இருந்தால் சற்று நாம் புருங்களை உயர்த்துவோம்.

ஆக, இந்தத் தொடர் தோல்விகள், எனக்கு நிரந்தரத் தோல்விகளாக அமைந்து விடுமோ? என்று எனக்குள்ளே  நான் கேள்வி எழுப்பினேன். அதாவது நான் தோல்வி அடைவதற்கு காரணம் யார் என்றால், “நான் தான் காரணம்.” ஆனால், என் தந்தையோ, என் தாத்தாவோ என் முன்னோர்களோ எனக்குள் அவர்களின் ஆளுமையை விட்டுச் சென்றிருக்கிறார்கள், அது நிச்சயமாக என்னைத் தோற்கவிடாது என்று நம்பினேன். எனவே, நான் தோற்றுவிட்டேன் என்று சொன்னால் என் முன்னோர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்து  விட்டதாக எனக்கு தெரியும். அவ்வாறு வாழ்க்கையில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்றால் என் வழியில் வருவோர்கள் என்ன ஆவார்கள்! என்றும் சிந்தித்தேன்.

இந்தத் தேனீக்கள் தனக்கான ஒரு களத்தை அமைத்துக் கொண்டு 30 மைல்கள், 40 மைல்கள் வரைசென்று தனக்கான தேனை எடுத்து வருகின்றது. ஆக, இந்தத் தேனீக்கள் எப்படி மரபியல் ரீதியாக வந்த திறனை வெளிக்கொணர்ந்து தேன் எடுக்கச் செல்கின்றதோ, அதுபோல தான் நானும் சென்றேன்.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் அங்கெல்லாம் முதியோர்கள் அதிகம். எனவே தான், அங்கு வேலை பார்ப்பதற்கு பல இளைஞர்களை அழைக்கிறார்கள். ஆனால் நம் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு வேலையைச் செய்வதற்கு நூறு நபர்கள் உள்ளனர். ஏன்? 1000 நபர்கள் கூட உள்ளனர். உலக நாடுகள் எல்லாம் நம்மை பார்த்து அஞ்சுகிற ஒரே விஷயம் நம் நாட்டு இளைஞர்களைக் கண்டு தான். ஏன் தெரியுமா? இங்குள்ள நம் அனைவருக்கும் PPI என்று சொல்லக்கூடிய (PERSONALITY POTENTIAL INDEX) என்ற ஆளுமைத்திறன் குறியீடு அதிகமாக காணப்படுகின்றது. அது இயற்கையாக அமைந்துவிட்டது. அதனால் தான் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்து நிற்கிறது.

குறிப்பாக ஒன்றை இந்த நேரத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நான் ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்களை வழிநடத்தி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறேன். அது என் வாழ்வின் ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அவ்வாறு நான் வழிநடத்தியவர்களில் ஒரு மாணவி அவர் பெயர் பெனோ ஜெஃபைன் அவர் முழுவதுமாகப் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி. வண்ணங்கள், இயற்கை, மனிதர்கள் என்று எதுவும் தெரியாத, உலகத்தையே தன் கண்களால் பார்க்காத மாணவி. அவர் ஒருமுறை என்னிடம் “சார், என்னால் எப்படி இந்த சிவில் சர்வீஸ் தேர்வைச் சந்தித்து, வெற்றி அடைந்து I.A.S & I.R.S போன்ற பணிகளை மேற்கொள்ள முடியுமா?” என்று கேட்டார். நான் “ஏன் இப்படிக்  கேட்கிறாய்?” என்று வினவினேன். அதற்கு அவர் “இல்லை சார், எனக்குப் பார்வை இல்லை. எப்படி நீ வாழ்வில் சாதிப்பாய் என்று என்னை எல்லோரும் கேட்கிறார்கள்” என்றார். நான் உடனே “உனக்கு கண்பார்வை தான் இல்லை மற்றபடி நீ எங்கே செல்ல வேண்டும் என்ற தூரம் உனக்கு தெரிகிறது. மேலும் அந்த தூரம் உன் மனதுக்குள் உள்ளது. உன் கண்களில் கிடையாது எனவே நீ நிச்சயம் வெல்வாய்” என்று கூறினேன். அவர் தான் “உலகிலேயே பார்வையில்லாத முதல் வெளியுறவுத் துறை அதிகாரி” (Indian Foreign Service I.F.S Officer). அதுவும் நம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் – உள்ளபடியே அவர் சிங்கப்பெண் தான். மூன்றாவது செயலாளராக பிரான்சில் பீடு நடை போட்டுக்
கொண்டிருக்கிறார்.

மிகவும் சிறிய வயதில் நுழைந்த இவர் 2040-ஆம் ஆண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை எழுதப் போகிறார். சிந்தித்து பாருங்கள். அவருக்கு இயற்கையாகவே, தனது மரபியல் ரீதியாக இருந்த ஆளுமையை, தனித்திறமையை அடையாளம் கண்டார். உலகிற்கு அரங்கேற்றினார். ஆக அவரும், நானும் இதனைச் செய்து வெற்றிக் கொள்ள முடியும் என்று சொன்னால், உங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் உங்களுக்கான ஆளுமைத் திறனை நீங்கள் மட்டுமே அடையாளம் கண்டு உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும். இங்கு இருக்கும் நாம் ஒவ்வொருவருமே தனித்துவம் மிக்கவர்கள், உழைப்பாளிகள், திறமைசாலிகள் தான். அந்த தனித்துவத்தை நீங்கள் கண்டு கொண்டால் உலகமே உங்கள் கையில். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று “வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்” இந்த வரிகளுக்கு ஏற்ப நமக்கான நாள் வரும், அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருங்கள் உங்களின் வெற்றிக் கனியை ருசியுங்கள். வாழ்த்துகள் !!!