வெற்றித் திசை 

ஆதவன் வை.காளிமுத்து

நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையாகிறது.நாம் ஒவ்வொருவரும் எண்ணங்களாலேயே வடிவமைக்கப் படுகிறோம். ‘‘நம் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பி நம் எண்ணங்களே’’ என்கின்றார்கள் சான்றோர்கள்.

‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்’’

என்கிறது திருக்குறள். நாம் எண்ணியதை எண்ணியவாறு அடையலாம் எப்போது? எப்போது திண்ணியர் ஆகின்றோமோ? அப்போது. திண்ணியர் என்றால் திடமான எண்ணம் உடையவர், உறுதியான எண்ணம் உடையவர் என்கிறது இக்குறள்.

எண்ணம் என்றாலே எண்ணிக்கை என்று பொருள். நமது மனதில் எழும் எண்ணங்களோ எண்ணிலடங்காதவை. உண்ணும் போதும், உறங்கும்போதும் கூட நம் எண்ணம் நிலைப்பதில்லை. உறங்கும்போதும் நம் மனம் எண்ணிக் கொண்டே தான் இருக்கிறது அதுதான் நமக்கு கனவாக வருகிறது.

உண்மையான மன நலம் உள்ள மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?- என்றால் எவனால் கனவு காணாமல் உறங்க முடிகிறதோ அவனே நலமான மனத்தை உடையவன் ஆகிறான். படுக்கையில் புரண்டு புரண்டு படுக்க கூடாது, படுத்தவுடன் தூக்கம் கண்களை சொருகிவிட வேண்டும். யாரால் தூக்கத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிகிறதோ அவர்களால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். தம்முடைய வாழ்க்கைக்கான பாதை என்ன? பயணம் என்ன? என்பதை தெரிவு செய்து அந்தப் பாதையில் தடுமாற்றமோ, மன மாற்றமோ இன்றி அவர்களால் பயணம் செய்ய இயலும். இவற்றுக்கெல்லாம் அடிப்படை தன் எண்ணங்களை குறைத்துப் பழகுவதில் தான் உள்ளது.

மனக் குழப்பம்

மனித மனத்தின் அனைத்துக்
குழப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் காரணமே எப்போதும் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கும் தேவையற்ற எண்ண ஓட்டங்களே. எண்ணத்தை ஒழுங்கு படுத்துவதன் மூலமாகத்தான் ஒருவர் மன நிறைவையும், மகிழ்வையும் அடையமுடியும்.எண்ணத்தை ஒழுங்குபடுத்தும் நுட்பமே எண்ணத்தைக் கவனிப்பதாகும். ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வோடு எண்ணங்களைக் கவனிக்கக் கவனிக்க எழுகின்ற எண்ணங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.

யார் ஒருவர்  எண்ணங்களை குறைக்கப் பழகுகிறார்களோ, அவர்களே வெற்றி என்ற இலக்கை மிக எளிமையாக அடையத் தகுதியானவர்களாகின்றார்கள். எண்ணத்தை நிறுத்த முடியுமா? என்றால் முடியாது. வேறு என்ன செய்ய முடியும்? என்ன செய்தால் எண்ணங்கள் குறையும்? என்றால், எழுகின்ற எண்ணங்களை கவனிக்க ஆரம்பித்தால் நம் மனத்தில் எழும் எண்ணங்கள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.

நாம் வெறும் சாட்சியாக நின்று கவனிக்கவேண்டும். நம்முடைய எண்ணங்கள் இயல்பாக குறைய ஆரம்பிப்பதை நம்மால் நன்றாக உணரமுடியும். தம் எண்ணங்கள் மீது கவனமாக இருப்பவர்கள் தன்னையே அடக்கி ஆள்பவர் களாகவும் மற்றவர்களையும் தம் வசப்படுத்தும் ஆளுமை உள்ளவர்களாகவும் விளங்குகிறார்கள்.

இது ஒரு அற்புதமான பயிற்சி முறை

நாமே இதைச் செய்து பார்த்து தெளிவடையலாம்.எண்ணங்கள் குறைந்தால் தான் எழுகின்ற எண்ணங்களை நம்மால் அடையாளம் காண முடியும். உதாரணமாக ஒரு பெரிய கூட்டம் கும்பலாக நிற்கின்ற போது நம்மவர்கள் சிலர் இருந்தால் அவர்களை அடையாளம் காண்பது கடினம் அல்லவா? அதேநேரம் கூட்டம் குறைவாக இருந்தால் நாம் நம் நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் அல்லவா? அதேபோல்தான் குப்பையாக நம் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் குறையக் குறைய நாம் நல்ல எண்ணங்களை அடையாளம் காண இயலும்.

நாம் அடையாளம் காணும் எண்ணங்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் எண்ணங்களாக மலரும். எந்த மாதிரியான எண்ணங்களை எல்லாம் நாம் செயல்படுத்தினால் வளமாக வாழலாம் என்று நம் எண்ணங்களை நாமே அடையாளம் காணும்போது, அவ்வாறு நாம் அடையாளம் கண்ட எண்ணங்கள் தான் நமக்கு திரும்பத் திரும்ப வர ஆரம்பிக்கும்.

எந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப வருகின்றதோ அந்த எண்ணங்கள் செயலுக்கும் வர ஆரம்பித்துவிடும். எனவே தான் சிந்தனையாளர்களும் தத்துவ ஞானிகளும்  ‘‘எண்ணத்தில் கவனமாக இருங்கள்’’ என்று கூறுகின்றார்கள். ‘‘எண்ணங்களைக் கூர்ந்து கவனியுங்கள்’’ என்று சொல்கிறார்கள்.

மாறாக குப்பையான எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்தால் அவைகள் செயலுக்கும் வந்தால் நம் வாழ்க்கை என்னவாகும்? என்று எண்ணிப் பாருங்கள்.

எனவே நம் எண்ணங்களை நாம் இனம் கண்டு கொள்வதும்,  இனம் கண்ட எண்ணங்களை மீண்டும் மீண்டும் சிந்திப்பதும் தான் நாம் எடுத்துக் கொண்ட இலக்கை அடைவதற்கான ஒரே வழி. குறைவான, ஆக்கபூர்வமான சிறந்த எண்ணங்களை மீண்டும் மீண்டும் சிந்திப்பவர்களே திண்ணியர் ஆகின்றார்கள்.

எண்ணங்களைக் குறைக்கும் வழி

எண்ணங்கள் இயல்பாகக் குறைய வழி 
உண்டா ? என்றால் இருக்கிறது. மனிதனின் உடல் மற்றும் மன இயக்கங்களை ஆராய்ந்து அறிந்த நம் நாட்டு சித்தர் பெருமக்கள் மனித இனம் நிறைவாக வாழ ஏராளமான அறிவியல் உண்மைகளை ஆராய்ந்து வடிவமைத்து ஏடுகளில் எழுதி
வைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்திற்கும் மூச்சிற்கும் சம்பந்தம் இருக்கின்றது என்ற உண்மையைக் கண்டுபிடித்துக் கூறி உள்ளார்கள்

உயிர் மூச்சு மனம் எண்ணம்

இந்த வரிசையில் பார்த்தால் உடலில் உயிர் ஆற்றல் சீராக இயங்க வேண்டுமென்றால் அதற்கு பிராணன் அல்லது சுவாச காற்று என்ற மூச்சுக்காற்று அவசியமாகிறது.

நமது சுவாசத்தின் தன்மை எதுவோ அதுதான் நம் மனத்தின் தன்மையாகவும் அமைகிறது. சுவாசம் எந்த அளவில் நடந்தால் நமக்கு நன்மை எந்த அளவில் நடந்தால் நமக்கு தீமை என்பதெல்லாம் சித்த நூல்கள் பேசுகின்றன.

மன அலைச்சுழல்

வேகவேகமாக சுவாசம் ஓடினால் மனதின் அலைச்சுழல் விரைவு வேக வேகமாக
இருக்கும். மனம் வேகவேகமாக அலைச்சுழல் விரைவு கொண்டு இயங்கும் போது நமது எண்ணங்களும் தாறுமாறாக தான் ஓடிக் கொண்டிருக்கும். எண்ணங்கள் குறைய வேண்டுமென்றால் மனிதனுடைய மன அலைச்சுழல் விரைவைக் குறைக்க வேண்டும். மனதின் அலைச்சுழல் விரைவு அளவு குறைய குறைய நம் சுவாசத்தின் ஓட்ட வேகமும் குறையும். மனதிற்கும் சுவாசத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுவாசத்தின் அளவு குறைந்து நிதானமாக இயங்கினால் மனதின் சூழல் விரைவு குறையும், அல்லது மனதின் சூழல் விரைவு குறைந்தால் சுவாசத்தின் இயங்கும் வேகம் குறையும்.

பிராணாயாமம், தியானம்

     சுவாசத்தின் அளவைக் குறைக்கும் பயிற்சிதான் பிராணாயாமம் எனும்  மூச்சுப்பயிற்சி.

     மனதின் சுழற்சி விரைவைக் குறைக்கும் பயிற்சிதான் தியானம் என்ற அகத்தவப்பயிற்சி.

ஆக பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி அல்லது தியானப்பயிற்சி இந்த இரண்டில் ஒன்றை நாள்தோறும் பழகி வந்தால் நம் எண்ணத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும்.

அதோடு மட்டுமல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள் எவை, எவை கெட்ட எண்ணங்கள் எவை எவை என்று, இனம் காணும் நுட்பம் நமக்கு இயல்பாக வாய்க்கும். அதன் பிறகு என்ன! நாம் விரும்பியவாறு  விரும்புகின்ற வெற்றி அடைய கூடிய மனதை நாம் அடைய முடியும்.

இன்னும் ஒரு திருக்குறளும் இதை வலியுறுத்தும் விதமாக உள்ளது அது,

தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

தம்கர்மம் என்பது நமக்கு உள்ள வேலையை, நமக்கு என்று இயற்கை விதிக்கப்பட்ட வேலையை அடையாளம் கண்டு அதையே தவமாகச் செய்வது.

அவம்செய்வது என்பது நமக்கு என்று இயற்கையாக அமைந்த அல்லது இயற்கையால் விதிக்கப்பட்ட வேலையை விட்டுவிட்டு ஆசையின் உந்துதலினால் நமக்கு உதவாத செயல்களை செய்து கொண்டிருப்பது.

நல்ல எண்ணங்களால் தம்கருமம் என்னும் நற்கருமம் தீய எண்ணங்களால் பேராசை என்னும் அவமும் விளையும். நாம் எதைத் தேர்ந்தெடுப்பது? சிந்திப்போம்!