கல்வி-அறிவு-ஞானம்

உங்கள் அறிவுத் திறன், நினைவாற்றல்  ஆகியவற்றிற்கும் நீங்கள் அருந்தும் நீரின் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் உண்மை. நீரின் தேவை குறித்து தற்போது காணலாம்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவன் வாக்கு. மனிதர்கள், பிற உயிரினங்கள் என அனைத்துமே உயிர்வாழ நீரும், சூரிய ஒளியும், பிராண வாயுவும்  இன்றியமையாதவை. உயிர்வாழ அடிப்படையான தேவைகள்.

பூமியெனும் கிரகத்தை எடுத்துக்கொண்டால் அதில் வெறும் 27% மட்டுமே நிலம். மீதமுள்ள 83% நீர்தான்! எனவேதான் பூமியை “ஆழி சூழ் உலகு” என்கிறோம்!

நிலத்தில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையை விட நீரில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

மனித உடலிலும் இதுவே நிலை. உடலின் செல்களில் பெரும்பகுதி (சுமார் 76-80 சதவிகிதம் வரையில்) தண்ணீர்தான் உள்ளது.

உடலுக்கு தண்ணீர் ஏன் அவசியம்?

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை ‘நீரின்றி அமையாது உடல்’ என்றும் சொல்லலாம். உடலின் இயக்கங்களில் நீரின் பங்கு எனப் பட்டியலிட்டால் அது மிக நீளமாக இருக்கும். மிக முக்கியமான சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் காணலாம்.

உடல் வெப்பம்

மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37, – 38 டிகிரி செல்சியஸ். இது மிக அதிகமானாலும் உடலின், மூளையின் இயக்கங்கள் பாதிப்படையும். ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதிகரித்தால் மரணம் கூட நிகழும்.

உடலின் இயல்பான வெப்பநிலை மிகவும் குறைந்து போனாலும் இதுவே கதி. ஆக, உடலின் வெப்பநிலை சீராக இருப்பது மிக மிக அவசியம்.

உடலின் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்வதில் நீரின் பங்கு முதன்மையானது. ஒரு எளிய உதாரணம் கூறுவதாக இருந்தால் வியர்வையைக் கூறலாம். உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது வியர்வையும் அதிகரித்து, உடலைக் குளிர்விக்கும். வெப்ப நிலை குறையும் போது வியர்ப்பது முற்றிலும் நின்றுபோய் உடல் வெப்பம் சேமிக்கப்படும். நீங்கள் அருந்தும் நீரின் அளவு குறைவாக இருந்தால் இந்தப் பணி சரிவர நடைபெறாது.

உணவு செரிமானம்

உணவை விழுங்குவது முதல் அதன் செரிமானம் வரையில் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் தேவையாக உள்ளது.

உணவின் செரிமானம் நமது வாயிலேயே துவங்கிவிடுகிறது. பற்களால் உணவு அரைபட உமிழ் நீரிலுள்ள தண்ணீர் அவசியம். உணவை மிருதுவாக்கவும், விழுங்கவும் கூட இந்த உமிழ் நீர் அவசியமாக உள்ளது.

உணவின் செரிமானத்திற்கு பலவிதமான இயக்க நீர்கள் (என்சைம்கள்) தேவையாக உள்ளன. இவை அனைத்துமே நீரை ஆதாரமாகக் கொண்டே உற்பத்தி ஆகின்றன. செல்களில் நடைபெறும் அனைத்து வேதியியல் மாற்றங்களுக்கும் நீர் அவசியம்.

 

உணவின் சத்துக்கள் உடலில் சேருதல்

உணவு செரிமானமான பின் அதில் உள்ள உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் சிறுகுடலில் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. இந்த சத்துக்கள் நீரில் கரைந்த நிலையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

உணவின் சத்துக்கள் ெசல்களை
அடைதல்

சிறுகுடலில் உறிஞ்சிக் கொள்ளப்பட்ட இந்தச் சத்துக்கள் இரத்தத்தின் வழியாக அனைத்துச் செல்களையும் சென்றடைகிறது.

ரத்த ஓட்டம், நிணநீர் ஓட்டம், இயக்க நீர்கள் சுரப்பு, செரிமான நீர்கள் சுரப்பு என உடலின் பலநூறு இயக்கங்களுக்கும் தண்ணீரே அடிப்படையாக உள்ளது.

சத்துக்கள் சக்தியாக மாறுதல்

செல்களின் உள்ளே நுழைந்த சத்துப் பொருட்கள் சக்தியாக மாறவும் நீர் அவசியம். உதாரணமாக, குளுகோஸ் நீரில் கரைந்துதான் வேதியியல் மாற்றங்கள் அடைந்து, சக்தியாக உருமாற முடியும். ஆக உடலின் செல்களுக்குத் தேவையான சக்தி தடையின்றிக் கிடைக்கவும் நீர் அவசியம்.

கழிவுப் பொருட்களின் வெளியேற்றம்

உடலில் உருவாகும் கழிவுப் பொருட்களை வெளியே அனுப்பவும், உடலைத் தூய்மைப் படுத்தவும் நீர் அவசியமாக உள்ளது.

மூளை சூடு

ஒரு கணினி தொடர்ந்து இயங்கும்போது சூடாகிவிடுவது போன்றே நமது மூளையும் சூடாகிவிடும். இந்த சூட்டைக் குறைக்கவும், மூளையையும் தண்டுவடத்தையும் மிக அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கவும், இந்த இரு பகுதிகளும் செரிபரோ ஸ்பைனல் திரவத்தால் சூழப்பட்டுள்ளன.

அருந்தும் நீரின் அளவு மிகக் குறைவாக இருந்தால் இந்த திரவத்தின் அளவும் குறைந்து போகும். மூளை, தண்டுவடம் ஆகிய பகுதிகள் சூடாகி, அவற்றின் இயக்கங்கள் பாதிப்படையும். கற்கும் திறனும், நினைவாற்றலும் குறைந்து போகும்!  

நீரின்றி இயங்காது உடல்

நீண்ட காலம் மழையின்றிப் போனால் நிலம் வறண்டு போவது போன்றே, உடலுக்குத் தேவையான அளவில் நீர் கிடைக்கவில்லை என்றால் நமது செல்களும் – குறிப்பாக மூளையின் செல்கள் வறண்டு போகும்! (மண்டை காயும்!) அதன் இயக்கங்களும் பாதிக்கப்படும். எளிதில் மூளை சோர்வடைந்து போகும்.

சில குழந்தைகள் எப்போதுமே ஒருவித மந்த நிலையில் இருப்பார்கள். எதிலும் ஆர்வமோ, ஈடுபாடோ இராது. இந்த நிலைக்குக் காரணம் தேவையான அளவில் நீர் அருந்தாததாகக்கூட இருக்கலாம். தேவையான அளவு நீர் பருகினாலே இவர்களின் உடலும், மூளையும் சுறுசுறுப்பாகிவிடும்.

ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு எவ்வளவு என்பது உங்களது வயதைப் பொறுத்து மாறுபடும். (ஒரு டம்ளர் என்பது இருநூறு மில்லி லிட்டர்).

வயது ஒரு நாளில் தேவையான
நீரின் அளவு

5 முதல் 10 வயது வரை 5 டம்ளர்கள், 10 முதல் 15 வயது வரை 7 முதல் 8 டம்ளர்கள், 15 வயதிற்குமேல் 10 முதல் 12 டம்ளர்கள். இந்த அளவில் கட்டாயமாக நீர் அருந்தினால் மூளையும், உடலும் சுறுசுறுப்பாக இயங்கும். மந்தத் தன்மை நீங்கும், கல்வியில் சிறந்து விளங்க முடியும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

     ஒரே நேரத்தில் அதிக அளவில் நீர் அருந்துதல் வேண்டாம். ஒரு நாளுக்குத் தேவையான நீரைச் சிறிது சிறிதாக நாள் முழுவதும் அருந்த வேண்டும்.

     அருந்தும் நீர் சற்றே வெது வெதுப்பாக (உடலின் வெப்பநிலையில்) இருக்க வேண்டும்.

     தூய்மையான நீரை மட்டுமே அருந்த வேண்டும்.

     வெயில் காலத்தில் அருந்தும் நீரின் அளவைச் சற்றே அதிகரிக்கவும். குளிர்காலத்தில் சற்றே குறைத்துக் கொள்ளலாம்.

அடுத்த இதழில் கற்கும் திறனுக்கும், உண்ணும்  உணவுக்கும் உள்ள தொடர்பு
குறித்துக் காணலாம்.

(தொடரும்)